கடல் புறா

கடல் புறா [Kadal Pura] - Sandilyan

கடல் புறா I - அஞ்சன விழிகளின் அமுத மொழியில்...

 

 

 

 

   “காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த களப் போர் பாடத் திறமினோ ”

                                -கலிங்கத்துப்பரணி.

 

பொருள்: காஞ்சி நகரம் இருக்க, கலிங்கம் அழிய நடந்த களப் போர் குறித்து பாட..

மறைபொருள்: ஆபரணம் இருக்க, ஆடை குலைய நிகழ்ந்த போர்..

காஞ்சி- மங்கையர் ஆபரணம்; கலிங்கம்- ஆடை.

 

 

தமிழ்நாட்டுக்கும், கலிங்க நாட்டுக்குமான பரஸ்பர வெறுப்பை தற்காலிகமாகவாது நிறுத்த விளையும் ஆசையில் சோழ மன்னன் கொடுத்தனுப்பிய சமாதான ஓலையுடன் பாலூர்ப் பெருந்துறைக்கு வந்து சேரும் கருணாகரன், வந்தவுடன் தன்னுடைய தோழனும், வேங்கி நாட்டு இளவரசனுமான அநபாய சோழன் (பிற்கால குலோத்துங்க சோழ மன்னன்) சிறை பிடிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு வெகுண்டெழுகிறான். அது மட்டுமல்லாமல், தமிழர்கள் சமீப காலத்தில் காரணமில்லாமல் சிறை பிடிக்கப்படுவதையும் அறிகிறான். உணர்ச்சி வேகத்தில் விழும் வார்த்தைகளை விட வேகமாக சண்டையில் சிக்கும் அவனைக் காவலர் துரத்த, தப்பிக்க வழி தேடும் அவன் மாளிகை ஒன்றினுள் பதுங்குகிறான். இளைய பல்லவனது ஆசை தப்பிப்பதில் இருந்தாலும், விதி அவனை மாட்டிவிடவே வழி செய்கிறது. காவலர்களின் கூர்வேல்களில் இருந்து தப்பும் கருணாகரன், தப்பவே முடியாத காமனின் கணைகளுக்கு இரையாகிறான்.

 

மாளிகை அறையின் இருளில் பதுங்கி இருக்கும் கருணாகரனை திகிலின் வயப்படுத்தும் வண்ணம் அறையை நெருங்குகிறது ஒரு மோகன உருவம். நெருங்குவதோடு நில்லாமல் அறையைத் தாளிடவும் செய்கிறது. அசந்தர்ப்பமான நிலையில் சிக்கி நிகழவிருக்கும் அசம்பாவிதத்தையும், அந்த அஞ்சன விழியாளின் அலறலையும், அதைத் தொடர்ந்து காவலருடன் நிகழப் போகும் சண்டையையும் எதிர்பார்த்து கண்ணை மூடிக் காத்திருக்கும் கருணாகரனுக்குக் கேட்பது அலறல்ல, அதிகாரக் குரலே. வியப்பின் வசப்படும் கருணாகரனை மேலும் வியப்பில் ஆழ்த்துகிறது அவனுக்குக் கிடைக்கும் வரவேற்பு.

 

கையில் வாளுடனும், கண்களில் வேல்களுடனும் அவனை வரவேற்கிறாள் அந்த அஞ்சன விழியாள். தொடரும் சம்பாஷணையின் மூலம் தான் தேடி வந்த கடாரத்து இளவரசனுடைய மகளது வாள் முனையில் மட்டுமல்லாது, அவளது அஞ்சன விழிகளின் அமுத மொழியிலும் சிக்கியிருப்பதை உணர்ந்து கொள்கிறான் கருணாகரன். கடாரத்து இளவரசனைக் காப்பாற்றிச் செல்ல சமாதான ஓலையுடன் வந்த தன் நிலை, பாலூர் வந்த சில மணி நேரத்தில் அவரிடமே அடைக்கலம் கொள்ளுமளவு மோசமாகும் என்று கனவிலும் எதிர்பார்க்காத இளைய பல்லவனுக்கு அன்றைய இரவு இருளில் மறைத்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் தான் என்ன? கருணாகரனால் தனது நண்பனை சிறையில் இருந்து காப்பாற்ற முடிந்ததா? கடாரத்து இளவரசனையும் அவரது மகளையும் கலிங்கத்தில் இருந்து சோழ நாட்டுக்கு பத்திரமாகக் கொண்டு செல்ல முடிந்ததா?  கருணாகரனை தீர்த்துக்கட்டும் முடிவோடு இருக்கும் கலிங்கத்து மன்னன் பீமனையும் அவனது படைகளையும் சமாளிக்க முடிந்ததா?

 

தமிழில் சரித்திர நாவல்களுக்கு சாண்டில்யனின் பங்களிப்பு பற்றி சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. கடல் புறா அவர் எழுதிய மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. கருணாகரத் தொண்டைமான் என்று பிற்காலத்தில் அடைமொழி பெற்று கலிங்கத்தின் மேல் சோழ மன்னன் ஆணையின் பெயரில் போர் தொடுத்து வெற்றி பெற்று, கலிங்கத்துப் பரணியிலும் பாடப்பெற்ற கருணாகர பல்லவனது இளவயது வாழ்க்கையும், கலிங்க நாட்டுடனான பகையையும் இட்டுக் கட்டும் கதை தான் கடல் புறாவின் முதல் பாகம்.

 

கடல் புறா சாண்டில்யனின் கற்பனையில் உதிக்கக் காரணங்கள் இரண்டு. முதலாவது, கலிங்கத்துப் பரணி. இரண்டாவது, கடல் தாண்டி தமிழ் மக்கள் கடாரம் கொண்ட வரலாறு. கலிங்கத்துப் பரணியில் கலிங்கப் போரின் வெற்றியைப் பற்றி மட்டுமல்லாது, அங்கே கருணாகரன் பயிர்களையும் வீடுகளையும் கொளுத்தி நிகழ்த்திய அட்டூழியங்களையும் படித்த சாண்டில்யன், அவற்றிற்கு கற்பனையில் காரணம் கற்பிக்க எழுதியதே கடல் புறாவின் முதல் பாகம். சமாதானத் தூது பேச கருணாகரன் கலிங்கம் வந்து இறங்குவதில் ஆரம்பிக்கும் கதை, சமரின் முரசொலி கேட்க அவன் காரணமாவதை எடுத்துரைக்கிறது. காரணம் கற்பிப்பதில் மட்டுமல்லாது அருமையான, வேகமான கதையாக்கத்திலும் சாண்டில்யன் வெற்றியே பெறுகிறார்.

 

வீரம், நட்பு, காதல், விறுவிறுப்பு என்று அனைத்தயும் சரிவிகிதத்தில் தரும் கடல் புறாவின் முதல் பாகம் சாண்டில்யனின் விவரணைகளால் மேலும் அழகு பெறுகிறது. அஞ்சன விழியாளின் அமுத மொழியானாலும், கருணாகரனின் கழுகுப் பார்வையானாலும், அநபாயனின் சீரிய அறிவானாலும், அமீரின் ஆழ்ந்த நட்பானாலும், அகூதாவின் சித்தாந்தமானாலும் அவரது எழுத்தில் புதுப் பரிமாணத்தையே பெறுகிறது. கடைசிச் சண்டையில் இருக்கும் விறுவிறுப்பு எத்தகையதோ அதே அளவிலானது காதல் காட்சிகளில் இருக்கும் விவரணைகளும். அத்தகைய கதைக்கு முதல் வரியாக செயங்கொண்டாரின் வீரமும் காதலும் சொட்டும் சிலேடைச் சொற்களை அமைத்தது பொருத்தமல்லாது வேறென்ன?

முதல் பாகத்தில் கலிங்க, சோழ நாட்டுப் பகையைப் பற்றி விளக்கும் கடல் புறா பிற பாகங்களில் சோழநாடு கடாரம் கொண்ட வரலாற்றை கற்பனை கலந்து சொல்கிறது. எட்டு மாத ஆராய்ச்சியின் பின்னரே எழுதப்பட்டது என்று சாண்டில்யனே முகவுரையில் கூறுகிறார். அந்த ஆராய்ச்சியை கண்கூடாக நாம் கதையில் காணலாம். கலிங்க சோழப் பகை, வேங்கி நாட்டு உள்பிரச்சனை, அகூதா பற்றிய விவரணைகள், பண்டைய கப்பல்கள் பற்றிய தகவல்கள் என எல்லாமே தெளிவாகவும், தேவையான வகையிலும் உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது. கடல் புறா கலிங்க நாட்டில் ஆரம்பித்து கடாரம் கொண்ட வரலாற்றை மூன்று தொகுதிகள் வழியாக விளக்குவதைப் போலவே, நாமும் மூன்று பதிவுகளில் பார்ப்போம்.

 

 

கடல் புறா 2 – கடல் அலையோ, கல் மலையோ….

                            

 

 

                                                         தழுவி நழுவும் கடல் அலையோ

                                                         தூரத் தெரியும் கல் மலையோ?

 

 

அக்ஷயமுனைக்கு வர இஷ்டப்படாதவன் போல மேகத்தின் ஊடே ஒளிந்திருந்த சூரியன், அக்ஷயமுனையின் கரைகளை வேண்டியே நெருங்கும் கப்பலை கவனித்துக் கொண்டிருந்தான். வந்தால் விளையப் போகும் நிகழ்வுகளை விளக்கும் எண்ணத்திலோ என்னவோ செங்கதிர்களை அந்தக் கப்பலின் மீது நின்று கொண்டிருந்த உருவத்தின் மீதும் பாய்ச்சினான். தளத்தில் நின்று கொண்டிருந்த இளையபல்லவனது விழிகள் கரையை விழுங்கி விடும் கழுகுப் பார்வையை வீசிக் கொண்டிருந்தன. தூரத் தெரியும் தூங்கும் எரிமலையான பகிட் பாரிசானின் உக்கிரமோ, விலகி ஓட நினைப்பன போல பறந்து செல்லும் பறவைகளோ அவன் பார்வையில் இருந்து தப்பவில்லை. அப்பிராந்தியத்திலேயே பயங்கரமான இடம் என அக்ஷயமுனை பெயர் பெற்றிருந்ததென்றால் அதற்கு காரணம் இருக்கவே செய்தது. நிலைமை எப்போதும் வெடிக்கத் தயாராயிருக்கும் பகிட் பாரிசனுக்கு ஒப்பானதே என்பது மட்டுமல்லாது, நர மாமிசம் தின்னும் பூர்வ குடிகளையும், கொள்ளையர்களையும் ஒருங்கே கொண்ட இடமாகவும் அது அமைந்திருந்தது என்பதை இளையபல்லவன் அறிந்தே இருந்தான். இவற்றுக்கெல்லாம் மேலாக, வஞ்சகமே உருவான கோட்டைத் தலைவனின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த அந்நகரத்தில் அடிக்கடி நிகழும் கொலைகளைப் பற்றிய தகவல்களும் பலரின் வாயிலாக அவனது காதுகளை எட்டியே இருந்தன.

கடும் உஷ்ணம் நிறைந்த அக்ஷயமுனையின் கரைகளை அலைகள் கூட தொட்டுத் தொட்டு உடனே விலகிக் கொண்டிருந்தன. தமிழகத்தில் இருந்து வரும் அனைத்துக் கப்பல்களும் நேர்வழியில் வராமல், அக்ஷயமுனயைத் தவிர்த்து சுற்றிப் போவதற்கான காரணம் கரையிலேயே தென்பட்டது என்றால் அது மிகையல்ல. உடனே கப்பல்களை கிளப்பிக் களவுக்கு செல்லும் வகையில் கரையிலேயே தங்கள் கூடாரங்களை அமைத்திருந்த கடற்கொள்ளையர்கள், தங்களைத் தேடி வரும் கப்பலை சற்றே வியப்போடு பார்த்தார்கள். அவர்களுடைய வியப்பு விரைவில் பயத்திற்கு இடம் கொடுத்தது. கப்பலில் இருந்து ஊதப்பட்ட சங்கொலியைக் கேட்டதும் அவர்கள் பயம் கொண்டதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. ஈவிரக்கமற்ற பயங்கரமான கடற்கொள்ளைக்காரனான அகூதாவின் வருகையை விவரிக்க ஊதப்படும் அந்த ஒலி தங்கள் வாழ்வில் விழப் போகும் பெரும் இடி என அறிந்திருந்த அந்நகரத்து மக்கள் உடனே தத்தம் வீடுகளை நோக்கி பயத்துடன் விரைந்தனர். அவர்களது இதயத் துடிப்போடு போட்டி போடும் வகையில் நகரத்தில் வாயில்கள் படாரென அறைந்து சாத்தப்பட்டன. பாலூர்ப் பெருந்துறையில் சற்றேறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்த வீரச் செயல்களின் முக்கியக் காரணியான இளையபல்லவன் மட்டும் உதட்டில் தவழும் இளநகையோடு கரையில் நடக்கும் நிகழ்வுகளை கவனித்து வந்தான்.

அகூதாவின் உதவியோடு பாலூரில் இருந்து தப்பிய கருணாகரன், தமிழகத்திற்குத் திரும்பாமல் ஒரு வருட காலத்திற்கு அவனிடமே கடற்போர் பயிற்சி எடுத்ததற்கும், பெரும் கடற்போர்களை சந்தித்ததற்கும், யாரும் வரத் தயங்கும் அக்ஷயமுனைக்கு வலிய வந்ததற்கும் உறுதியான காரணம் ஒன்று இருக்கவே செய்தது. தனது மன வானில் சிறகடித்துப் பறக்கும் காஞ்சனைப் புறாவை ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்தின் பட்டத்து இளவரசியாக்கும் எண்ணம் மட்டுமல்லாது, தமிழரை இன்னல்படுத்தும் கலிங்கத்தின் வலுவான கடற்படை பலத்தை உடைக்கவும், வலுவான கடற்படைத்தளம் ஒன்றை அமைக்கும் ஆசையால் கருணாகரன் ஆபத்தில் வலியப்போய் விழுகிறான் என்பது பிறருக்குத் தெரியாதது வியப்பில்லை என்றாலும், அவனது நண்பன் அமீருக்குக் கூட தெரியாமல் இருந்தது ஆச்சர்யமே. கருணாகரனுக்கருகிலேயே எப்போதும் நின்றாலும் அவனது உள்ளக்கிடக்கையை அறியாத அமீர் அவனிடம் தனது அதிருப்தியையும், எதிர்நோக்கி இருக்கும் ஆபத்தையும் விளக்க வாயெடுத்தான். சங்கொலியைக் கேட்டு ஓடும் மக்கள் வந்திருப்பது அகூதா அல்ல என்பதை அறிந்து கொள்வார்களேயானால் ஏற்படக்கூடிய விபரீதத்தை குறித்து எடுத்துக் கூற முற்பட்ட அவனை இளைய பல்லவனது உறுதியான கை தடுத்தது. அதனினும் உறுதியான பார்வை அந்நகரத்துக் கோட்டையின் மேல் நிலைத்ததைக் கண்ட அமீர், கருணாகரன் காண முற்பட்ட கனவு அபாயமானது என்பதை உடனே உணர்ந்து கொண்டான்.

திகில் வயப்பட்டிருந்த அமீரை மேலும் திகிலுக்குள்ளாக்கும் நோக்கத்தோடோ என்னவோ, கரைக்குச் செல்ல சிறு படகொன்றை தயார் செய்யுமாறு ஆணையிட்ட பல்லவன் குரல், தன்னுடன் யாரும் வரத் தேவையில்லை என்று சுட்டிக்காட்டவும் செய்தது. சற்று நேரத்தில் படோபடமாக அறையிலிருந்து வெளியே வந்த அவனைக் கண்ட அமீரின் கிலி உச்சத்திற்குச சென்றது. கோட்டையை அடைய கருணாகரன் கொள்ளையர் கூட்டத்தைத் தாண்டியே செல்ல வேண்டும் என்பதை அறிந்திருந்த அமீர், அவ்வாறு செல்லும் போது கருணாகரனது உடமைகள் மட்டுமல்லாது, உயிரும் நொடிப் பொழுதில் பறிக்கப்படும் என்பதையும் உணர்ந்தே இருந்தான். உணர்ந்திருந்ததாலேயே “துணிவுக்கும் ஒரு எல்லை வேண்டும்” என்று மனதில் எண்ணமிட்டான். ஆனால் இளையபல்லவனது துணிவு அமீரின் வரையறையையும் மிஞ்சியது என்பதை மட்டும் அந்நேரத்தில் அவன் உணர்ந்தானில்லை.

கடற்கரையை சிறிது நேரத்தில் அடைந்த இளையபல்லவனை நோக்கி வெறியுடன் வந்தது கொள்ளையர் கூட்டம். கப்பலில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அமீர் கொலைவெறியோடு வந்த கொள்ளையர் கூட்டம் சிறிது நேரத்திலேயே குதூகலத்தோடு இளையபல்லவன் பின்னால் சென்றதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தான். ஆச்சர்யம் அடைந்தது அமீர் மட்டுமல்ல, கோட்டைத் தலைவனும் தான். கொடூரத்துக்கும் வஞ்சகதிற்கும் பெயர் போன பலவர்மன், கொள்ளையரை நோக்கி வலியச் சென்ற முட்டாளைக் கொல்லும் அவசியம் தனக்கில்லை என்றே எண்ணிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திலேயே கொள்ளையர் கூட்டம் புடைசூழ வந்த உருவத்தைக் கண்ட பலவர்மனது மனதில் கிலி சற்றே எழுந்தது. சிறிது நேரத்தில் பலவர்மனைச் சந்தித்த கருணாகரனை வஞ்சகம் நிறைந்த இரு விழிகளும், விஷமம் நிறைந்த இரு விழிகளும் வரவேற்றன.

பலவர்மனது மகளைக் கண்டு, அவளது மயக்கும் மோகன அழகைக் கண்டு எதற்கும் அசையாத பல்லவனது நெஞ்சம் அசைந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கேற்ப, அவனது விழிகளும் சஞ்சலத்தால் அசைந்தன. சற்று நேரத்தில் அவனுக்கு கிடைத்தது ஓரழைப்பு. அந்த ஒய்யார மோகினியாலேயே அந்த அழைப்பும் விடுக்கப்பட்டது. அன்றிரவு நடக்கவிருக்கும் விழாவில் கலந்து கொள்ள வருமாறு கோரிய அவளது சொற்களில் எவ்வளவு ஆர்வம் இருந்ததோ அதே அளவு குரூரம் பலவர்மனது கண்களில் அந்நேரத்தில் பரவியது. பலவர்மன் அவ்விழாவில் எதிர்பார்த்தது ஒரு கொலை. விழுந்தது ஒரு கொலை தான். ஆனால் அதன் மூலம் விளைந்தது வேறு நிலை. புதிய பல பொறுப்புகளோடு, புரியாத பல ஆபத்துக்களையும் சம்பாதித்துத் தந்தது அந்தக் கொலை.

கடற்தளம் அமைக்க வந்த இளையபல்லவனது கருத்தைக் குலைக்கும் வண்ணம் எழுந்த ஆபத்து தான் என்ன? மயங்க வைக்கும் மோகனாங்கியின் அருகாமையைக் கூட மறக்க வைக்கும் வகையில், இளையபல்லவன் உள்ளம் கலங்க எழுந்த அந்த ஆபத்தை அவனால் சமாளிக்க முடிந்ததா? கருணாகரனால் அபாயம் நிறைந்த அக்ஷயமுனையில் நிலைக்க முடிந்ததா? தன் மதியை மயக்கிய மோகன விழியாளை அவனால் கைப்பற்றத் தான் முடிந்ததா?

முதல் பாகத்தில் சோழ கலிங்கப் பகையை விறுவிறுப்பாகச சொன்ன சாண்டில்யன், இரண்டாம் பாகத்தில் கலிங்கத்தின் கடற்பலத்தை ஒழிக்க கருணாகரன் தளம் அமைக்க முயல்வதைக் கூறுகிறார். முதல் பாகத்தின் விறுவிறுப்புக்கு மாறாக சற்றே மெதுவாகப் போகும் இப்பாகத்தில் பற்பல திருப்பங்கள் இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை கதையை பெருமளவு நகர்த்தாததால் கதை சற்றே இழுவையாகத் தெரிவதில் வியப்பில்லை. ஆசையின் காரணமாக கடல் புறா சற்றே நீட்டப்பட்டது என்று சாண்டில்யன் முகவுரையில் எதைச் சொல்லி இருப்பார் என்பது தெளிவு (மூன்றாம் பாகத்தின் ஆரம்பமும் இரண்டாம் பாகத்தினை சற்றே ஒத்திருக்கும் என்பது வேறு விஷயம்). ஆனாலும், கடல் புறாவின் ஓட்டத்தோடு பின்னிப் பிணைந்து இருப்பதால் இப்பாகம் முக்கியமானதொன்றே. மேலும், பழங்காலத்துக் கப்பல்களைப் பற்றிய தகவல்கள் பல இதில் உண்டு. குறிப்பாக, பண்டைய காலத்துக் கப்பல்களின் வகைகள், அவற்றின் சிறப்புகள், அவற்றின் உபயோகம் போன்றவை பற்றிய தகவல்களும் இப்பாகத்தில் உண்டு. ஆனால் கடல் புறா கதையின் தனிச்சிறப்பான கடல் போர் பற்றிய விவரணைகள் இந்தப் பாகத்தில் இல்லாது போனது ஒரு குறையே. முதல் பாகத்தின் சோழ கலிங்க சிக்கல்கள், பாலூரை விட்டுத் தப்பத் திட்டமிடும் கட்டங்கள், மூன்றாம் பாகத்தின் கடற்போர் விவரணைகள் ஆகியன வழங்கும் விறுவிறுப்புக்கு இணை இந்தப் பாகத்தில் எங்கும் கிடையாது. கரையில் இழுத்த கருணாகரனது கப்பல் போலவே கதையும் நகராது பலமிழந்து கிடப்பது இப்பாகத்தின் மிகப்பெரிய பலவீனம். மூன்றாம் பாகம் குறித்த அடுத்த பதிவில் கடாரம் கொண்ட கதையையும், கடல் போர்களையும், கடல் புறாவின் கதையோட்டம், கதாப்பாத்திரங்கள், அவற்றின் மாற்றங்கள் ஆகியன அனைத்தையும் பார்க்கலாம்.

 

பின் குறிப்பு: கடற்கரையில் கால்களில் அலை மோத, விரல்கள் பின்னிப் பிணைய அமர்ந்திருக்கும் வேளையில் கருணாகரனிடம் மஞ்சளழகி, “ இதோ என்னை வந்து தொட்டுவிட்டுப் போகும் கடல் அலை போலத் தான் நீங்களும். தொட்டு விலகுவீர்களோ அல்லது மலை போல நிலைப்பீர்களோ?” என்று சொல்லுவதாய் ஒரு காட்சி உண்டு. அதுவே இப்பதிவின் தலைப்பாக உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

 

 

 

கடல்புறா 3 – புயல் விடு தூது....

 

ஆழிப் பேரலையின் ஆதிக்கத்தால் ஆடிய கடல்புறாவின் தள்ளாடத்திற்கு ஏற்ப இளையபல்லவன் மனதும் இரு அழகிகளின்பாலும் சாய்ந்தாடிக் கொண்டிருந்தது. வாழ்க்கையைப் போன்ற நிலையற்ற அலைகளின் மீது தன் பார்வையை ஓடவிட்ட கருணாகரன், ஒரே வருடத்தில் தன் வாழ்வில் நிகழ்ந்துவிட்ட நிகழ்வுகளை எண்ணிப்பார்த்து விதியின் கரங்களைப் பற்றி வியந்து கொண்டிருந்தான். பாலூரில் சந்தித்த பைங்கிளியும், அக்ஷயமுனையில் சந்தித்த அழகியும் அவன் மனதில் மாறி மாறி உலா வந்தார்கள் என்றாலும், மஞ்சள் அழகியின் முகமே அந்நேரத்தில் அவன் மனதில் பிரதானமாய் எழுந்து நின்றது. அவளுடைய மர்மம் நிறைந்த வாழ்க்கையையும், சோகம் நிறைந்த முகத்தையும் நினைத்து கருணாகரன் துன்பத்தின்வயப்பட்டு மனம் மருகி நின்றான்.

அக்ஷயமுனையை விட்டுக் கிளம்பும்போது “அலையைப் போலவே என்னை தழுவிவிட்டு பிரிகிறீர்கள்” என்று மஞ்சள் அழகி சொன்னது அவனது மனதை அறுத்துக் கொண்டிருந்தது. தன்னை மயக்கிய மஞ்சள் மயிலை நினைத்து அவன் விட்ட பெருமூச்சை காற்று களவாடிக் கொண்டு முன்னே ஓடியது. கட்டறுபட்ட காட்டுப்புரவியென ஓடிய காற்று அவனுக்கு சாந்தத்தை அளிக்கவில்லை. அலைகளை சாந்தப்படுத்த விரும்புவன போல அவற்றை நோக்கி விரைந்த மழைத்துளிகளும் அவனுக்கு சாந்தத்தை அளிக்கவில்லை. படகின் நடனமோ, காற்றளித்த கானமோ, தாளம் போட்ட அலைகளோ அவனது சிந்தனையைக் குலைக்க சக்தியற்றவையாகின. தனது காதலைப் பற்றி அந்த மஞ்சள் மயிலுக்கு தூது அனுப்பக் கூட வழி இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த கருணாகரனைக் கண்ட காற்று கடல்புறாவை அசைத்துக் காட்டியது. தூது போக விருப்பப்படுவது போல புயலும் மெல்ல மெல்ல கடல்புறாவை அணுகிக் கொண்டிருந்தது.

கருணாகரனை அணுகியது தூது போக ஆசைப்பட்ட புயல் மட்டுமல்ல. விருப்பமில்லாத பிரயாணத்தில் பிடிபட்ட அக்ஷயமுனைத் தலைவனும் போகும் இடம் பற்றித் தெரிந்து கொள்ள இளைய பல்லவனை நோக்கி வந்து கொண்டிருந்தான். ஆனால் போகவிருக்கும் இடத்தைக் கேட்டதும் வானத்தில் கருத்திருந்த மேகத்தைக் காட்டிலும் பலவர்மனது முகம் கருத்தது. கோபத்தோடு வந்து மோதிய அலைகளின் வேகத்தைக் காட்டிலும் அதிவேகத்துடன் அவன் மனதை பயம் வந்து ஆக்ரமித்தது. அலைகளின் பேரிரைச்சலையும் வரப்போகும் பேரிடர் பற்றிய சிந்தனை மறக்கடித்தது. கருணாகரன் போக விரும்பிய மாநக்காவரத்தை பற்றி எண்ணிப்பார்த்த உடனேயே பலவர்மனது உடல் நடுங்கியது. ஏதோ சொல்ல முற்பட்டு மெல்ல வெளிவந்த அவனது குரலை திடீரென எழுந்த பெருங்கூச்சல் ஒன்று அடக்கியது. கடல்புறாவை நோக்கி வந்து கொண்டிருந்த இரு போர்க் கப்பல்களைக் கண்டதும் பலவர்மனது பயம் பல மடங்கு அதிகமானது. சத்தமின்றி மெல்ல நெருங்கும் காலனைப் போல காரிருளில் கடற்போர் புரிய அந்தக் கலங்கள் இரண்டும் அசைந்தாடி வந்து கொண்டிருந்தன. தொடர்ந்து நடந்த போரில் சுழற்றி அடித்த காற்றோடு போட்டியிட்டுப் சுழன்று சுழன்று போர் புரிந்த கடல்புறா வென்றது. ஆனால் கடல்போரில் அனுபவமில்லாத பலவர்மனை எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று தாக்க, சுற்றியிருந்த இருள் பலவர்மனது கண்களுக்குள்ளும் மெல்ல புகுந்து ஊடுருவியது.

போரில் வென்ற களிப்போடு அலையில் சீறிச் சென்ற கடல்புறா சிறிது நாட்களிலேயே மாநக்காவரத்தினருகே வந்தடைந்தது. போரில் ஏற்பட்ட காயத்தால் பலவர்மன் சுரணை தவறிக் கிடந்தாலும் அவனது உதடுகள் “அபாயம்!” என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் அடிக்கடி முணுமுணுக்கத் தவறவில்லை. காதலனின் வருகையை ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் காதலியின் நாணத்தைப்போல இருந்தும் தெரியாமல் தூரத்தே எரிந்து கொண்டிருந்த ஒற்றைப்பந்தம் கடல்புறா மாநக்காவரத்தை எட்டிவிட்டதை பறைசாற்றியது. ஆனால் கரையை நோக்கிப் போகும் கப்பலை தடுக்கும்வண்ணம் உக்கிரத்தோடு மோதிய அலைகள் கடல்புறாவிடம் சொல்ல வந்த சேதி தான் என்ன? கடலலையில் நர்த்தனமாடிச் செல்லும் கடல்புறாவை கபளீகரம் பண்ணக் கரையில் காத்திருக்கும் அபாயம் எத்தகையது? அதில் இருந்து தப்பி, மாநக்காவரத்தில் தான் ஆசைப்பட்டது போல கருணாகரனால் ஒரு கடற்போர் தளத்தை அமைக்க முடிந்ததா? ஸ்ரீவிஜயத்தை வெல்ல வேண்டும் என்ற தனது கனவை நினைவாக்கத்தான் முடிந்ததா? தூது அனுப்ப வழியில்லாது தவித்த புயலுக்கு சமாதானத் தூது அனுப்பும் நிலை ஸ்ரீவிஜயத்துக்கு வந்ததா?

மூன்றாம் பாகத்தின் முற்பகுதி அக்ஷயமுனையை விட்டுக் கிளம்பும் கருணாகரன் மாநக்காவரத்தில் கடற்தளம் அமைப்பதையும், பின்னர் அவனது கடற்கொள்ளையர் குழுமத்தின் மூலம் கலிங்கத்தின் கடற்பலத்தை உடைப்பது குறித்தும்; பிற்பகுதி ஸ்ரீவிஜயத்தின் மேலான படையெடுப்பையும் கொண்டிருக்கிறது. மூன்றாம் பாகத்தின் முதற்பகுதி சிற்சில மாற்றங்கள் இருந்தாலும் கிட்டத்தட்ட இரண்டாம் பாகத்தை ஒத்திருப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது என்றாலும் இரண்டாம் பாகத்தின் நீளம் இதில் கிடையாது என்பதும் மிகப்பெரிய ஆறுதல். இப்பாகத்தின் மிகப்பெரிய பலம், கடற்போர் விவரணைகள். குறிப்பாக, கடைசி நூறு பக்கங்களின் விறுவிறுப்பு தனித்தன்மையானது. இப்பாகத்தில் வரும் கடல்போர் குறித்த விவரணைகள், சாண்டில்யன் எழுதிய எந்தக்கதையையும் விட அருமையாக சொல்லப்பட்டிருக்கும்.

சரி, இப்பொழுது முதல் பாகத்தில் இருந்து இறுதிப் பாகம் வரையான கருணாகரனது பயணத்தைப் பார்ப்போம். ஸ்ரீவிஜயத்தின் மேலான படையெடுப்பு, கலிங்க சோழப் பகை, கலிங்கப்போரின் போது கருணாகர பல்லவன் செய்த பற்பல அட்டூழியங்கள் ஆகியவற்றை இணைத்து இவை அனைத்துக்கும் காரணம் கற்பிக்கும் வண்ணம் இட்டுக்கட்டி எழுதப்பட்டதே முதல் பாகம் என்பதை முன்னரே பார்த்தோம். ஒரு அருமையான சரித்திரக் கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முதல் பாகம் ஒரு அற்புதமான உதாரணம் என்று கூறலாம். காதல், சிருங்காரம், வீரம், விறுவிறுப்பு என்று எல்லாமே சரியான கலவையில் இப்பாகத்தில் கலந்திருக்கும். மேலும், அநபாயன், கருணாகரன், அமீர், கலிங்கத்து பீமன்,காஞ்சனா என்று கதாப்பாதிரங்களும்,அவற்றின் அறிமுகங்களும் கூட அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இரண்டாம் பாகம், கருணாகரன் கலிங்கத்தில் இருந்து அகூதாவின் உதவியோடு தப்பி அவனிடம் கடல்போர் முறைகளை பயின்ற பின்னர் நடக்குமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. கலிங்கத்தில் இருந்து தப்பிய பின் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு கதை ஆரம்பிக்கிறது. கடல்தளம் ஒன்றை அமைக்க ஆசைப்படும் கருணாகரன் ஸ்ரீவிஜயத்துக்கும் கலிங்கத்துக்கும் நடுவில் இருக்கும் அக்ஷயமுனையில் தனது தளத்தை அமைத்து கலிங்கத்தின் கடற்பலத்தை ஒடுக்க நினைக்கிறான். அதை செயல்படுத்தும் நோக்கில் அக்ஷயமுனைக்கு வரவும் செய்கிறான். பிரபல கொள்ளைக்காரனான அகூதாவின் உபதளபதியாக இருந்தவன் என்ற பயம் தனக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்பி அக்ஷயமுனைக்கு வரும் இளையபல்லவனுக்கு பலவிதத் தொல்லைகள் வருகின்றன. கொள்ளைக்காரர்கள் ஒருபுறம், காட்டுவாசிகள் மறுபுறம், வஞ்சகம் நிறைந்த கோட்டைத்தலைவன் இவர்களுக்கு நடுவே என்று அவனுக்கு ஏற்படும் சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நடுவே பூக்கும் காதலும் இன்பத்தை விட பிரச்சனைகளையே மென்மேலும் கொண்டுவந்து சேர்க்கிறது. முற்றிலும் கற்பனை கலந்து எழுதப்பட்ட பாகம் இது. கதையை கவனித்தால் இதை எவ்வளவு விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கலாம் என்பது தெரியவரும். முதல் பாகத்தின் பரபர கதையோட்டத்திற்குப் பின்னர் நாம் அவ்வாறு எதிர்பார்ப்பதில் தவறும் கிடையாது. ஆனால் இப்பாகத்தில் விறுவிறுப்பு மிகக்குறைவே. பல திருப்பங்கள் உண்டு என்றாலும் அவை ஊகிக்கக்கூடிய முறையில் எழுதப்பட்டிருப்பது மிகப்பெரிய சறுக்கல். இளையபல்லவன் தவிர்த்து வேறெந்த கதாப்பாத்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதும் மிகப்பெரிய குறையே. பலவர்மனது கதாப்பாத்திரம் பெயரில் மட்டுமே பலம் பொருந்தியதாக இருப்பதும் கதையின் விறுவிறுப்பிற்கு பாதிப்பையே ஏற்படுத்துகிறது. சற்றே பொறுமையோடு, முதல் பாகத்தையொட்டிய வேகத்திற்கான எதிர்பார்ப்பை தள்ளிவைத்து விட்டுப் படித்தால் இப்பாகத்தை ரசிக்கலாம்.

அக்ஷயமுனையை விட்டுக் கிளம்பும் இளையபல்லவன் மாநக்காவரத் தீவுகளை நோக்கி அங்கே கடற்தளம் அமைக்கும் எண்ணத்தில் சென்று, அங்கேயும் பிரச்சனைகளை சந்தித்து, கடற்தளம் அமைத்து கலிங்கத்தின் கடல்பலத்தை ஒடுக்குவது குறித்து முற்பாதியிலும், ஸ்ரீவிஜயத்தின் மீதான போர் குறித்து பிற்பாதியிலும் கொண்டது மூன்றாம் பாகம். முன்னரே சொன்னது போல, முன்பாதி இரண்டாம் பாகத்தை ஒத்திருப்பது அலுப்பை ஏற்படுத்தக் கூடியவொன்றே. ஆனால் இரண்டாம் பாகத்தை விட இதில் சற்றே விறுவிறுப்பு உண்டு என்பது ஆறுதல். மூன்றாம் பாகத்தின் பிற்பகுதியானது கலிங்கத்தின் மீதான போருக்கான ஆயத்தங்கள், போருக்கு வித்திடும் சூழ்நிலைகள், தொடரும் போர் போன்றவை பற்றியது. ஸ்ரீவிஜயத்தின் துறைமுகப்போர் பற்றிய சாண்டில்யனின் விவரணைகள் அற்புதமானவை. ஜம்பி நதியின் முரட்டு நீரோட்டத்திற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல கடைசிப் போரின் விறுவிறுப்பு. இப்பாகத்தின் முற்பகுதியில் வரும் கங்கவர்மன் கதாப்பாத்திரம் பலவர்மனது பாத்திரத்தை விட சூழ்ச்சியும் அறிவும் பொருந்தியது என்பதால் சற்றே விறுவிறுப்பைத் தரும் வகையில் இருக்கிறது என்றாலும், இதையெல்லாம் இரண்டாம் பாகத்திலேயே படித்தாயிற்றே என்ற எண்ணம் தரும் அலுப்பு அதனைப் பல சமயங்களில் மட்டுப்படுதவே செய்கிறது. பிற்பகுதியில் வரும் ஸ்ரீவிஜயச்சக்ரவர்த்திக்கும் பெரிதான வேலை ஏதுமில்லை என்றாலும் கதையோட்டம் அதை மறக்கச் செய்கிறது.

கடல்புறாவும் யவனராணியும் சாண்டில்யனின் கதைகளிலேயே மிகச் சிறந்தவை என்று சொல்லப்படுபவை. ஆனாலும், கடற்போர் குறித்தான விவரணைகளில் சாண்டில்யன் எழுதிய எந்தக் கதையையும் விட இதில் விறுவிறுப்பும், விவரணையும், வேகமும் அதிகம். மலையூரில் தொடங்கும் கடற்போர் தொடங்கி ஸ்ரீவிஜயத்தின் துறைமுகத்தில் நடக்கும் கடற்போர் வரையான கட்டங்கள் சாண்டில்யனின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
சமீபத்தில் கனவுகளின் காதலரோடு விவாதிக்கையில் கடல் புறாவை சரித்திரப் புனைவு என்று சொல்லாமல் சரித்திர இழை கொண்ட சாகசப் புனைவு என்று கூறுவதே சரியாக இருக்கும் என்று கூறினார். அது உண்மையே. யவன ராணியில் சரித்திரச் சம்பவங்களை நெருக்கமாக ஒட்டியே கதை பின்னப்பட்டு சரித்திரத்தில் இல்லாத இடைவெளிகளை கற்பனை கொண்டு நிரப்பும் வகையிலேயே கதையோட்டம் இருக்கும். கடல்புறாவில் சரித்திரம் பிரதானமாக இல்லாது, சாகசமே பிரதானமாக இருக்கும்.

மேலும், இத்தனை காலம் கழித்து சாண்டில்யனின் எழுத்து ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் சொல்ல வேண்டுமென விவாதித்தோம். சரித்திர நாவல்களை எழுதிப் பெரும் பெயர் பெற்றவர்களில் முக்கியமானவர் இருவர். ஒருவர் கல்கி, மற்றவர் சாண்டில்யன். கல்கியின் எழுத்தை நான் முதன்முறை படிக்கையில் கூட அது எனக்கு எந்தவிதமான ஆர்வத்தையும் தரவில்லை, சிவகாமியின் சபதத்தைத் தவிர்த்து. சிவகாமியின் சபதம் அருமையானதொரு கதைக்களனைக் கொண்டிருந்தாலும் எழுத்துநடை இப்போது படிக்கும் போது நிச்சயம் அலுப்பையே ஏற்படுத்தும்.

சாண்டில்யன் முறைப்படி தமிழ் இலக்கியத்தையும், புராணத்தையும் பயின்றவர் என்பதால் வர்ணனைகளுக்குப் பஞ்சமேதும் கிடையாது. முதல் பாகத்தை நான் மறுபடி படிக்க ஆரம்பித்த பொழுது என் நினைவில் உள்ளதை விட அதில் வர்ணனைகள் சிறப்பாக இருப்பதைக் கண்டு ஆச்சர்யமே அடைந்தேன். கதையின் விறுவிறுப்பும் இரண்டாம் வாசிப்பில் மங்கவில்லை. இரண்டாம் பாகமும், மூன்றாம் பாகத்தின் முற்பகுதியும் முதல் பாகத்தின் வேகத்திற்கு எந்த வகையிலும் ஈடு கொடுக்க முடியாது என்ற போதிலும், ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் கடல் புறா எக்காலத்தில் படித்தாலும் அலுக்காத அருமையானதொரு சாகசப் புனைவு.