South of the Border, West of the Sun - Philip Gabriel, Haruki Murakami

 

இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனான ஹஜிமேவுக்கு தன் இளவயதில் நிராசையாகிப் போன கனவு மத்திமவயதில் நிறைவேறும் வாய்ப்பு   கிடைக்கிறது. அழகான மனைவி, அமைதியான குடும்பம், வளமையான வாழ்க்கை என எல்லாம் இருந்தும் அந்த நிராசையே அவனது வாழ்க்கையில் விவரிக்க முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அமைதியின்மைக்கும் தேடுதலுக்கும் குழப்பத்திற்கும் வழிவகுக்கிறது. குருடனுக்கு எதிரே இருக்கும் கடல் போல வாழ்க்கையை வளமற்றதாக்குகிறது.

ஆனால் இவை அனைத்தும் சிறுவயதுக் காதலி ஷிமமொடோ ஒரு மழைக் கால இரவில் அவனது வாழ்க்கையில் மறுபிரவேசம் செய்யும் போதும் மறைந்து போகிறது. மழையோடு வரும் மங்கை கனவாகவே முடிந்துபோன கனவுகளையும், வெள்ளந்தியான மாலைகளையும், காமம் நிறைந்த இரவுகளையும், தயக்கம் மறைத்த தாபத்தையும், தவற விட்ட வாய்ப்புகளையும், காலம் குலைக்காத ஆசையையும், வருத்தம் மறைத்த விழிகளையும் மழையினூடே எடுத்து வருகிறாள்.

விளக்கைத் தேடும் விட்டிலைப் போல ஹஜிமே அவள் நினைவுகளிலேயே மூழ்குகிறான். ஒவ்வொரு நாளும் அவளது வருகைக்காகவே ஏங்குகிறான். ஒவ்வொரு முறையும் அவளது வருகையோடு அவனது வெறுமை கொஞ்சம் கொஞ்சமாக சாகிறது. வாழ்க்கையில் இனி அவளைத் தவிர வேறெதுவுமே வேண்டாம் என்று அவனது சுயநல மனம் துடிக்கிறது. ஆனால் ஷிமமொடோ ஒரு புரியாத புதிராகவே இருக்கிறாள். தனது வாழ்க்கையைப் பற்றி எதுவுமே சொல்ல அவள் விருப்பப்படுவதில்லை. என்ன செய்கிறாள், எங்கே வசிக்கிறாள் என எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளவும் அவள் விருப்பப்படுவதில்லை. ஆனால் இவை எதிலுமே ஹஜிமேவுக்கு அக்கறை இல்லை. ஷிமமொடோ ஹஜிமேவின் அண்மைக்காகவே வருவது போல, ஹஜிமே அவளது அண்மைக்காக மட்டுமே அனைத்தையும் துறக்கத் தயாராகிறான்.

இளவயதுக் காதல், 70களின் அமெரிக்க ஜாஸ் இசை, சுயநலம் நிறைந்த மனிதர்கள், தற்கொலை தேடும் பெண்கள் என முரகாமித்தனங்கள் இதில் நிறையவே உண்டு. முரகாமியின் மிகப் பிரபலமான கதையான Norwegian wood இற்கும் இதற்கும் பற்பல ஒற்றுமைகளும் உண்டு. ஆனால் நார்வேஜியன் வுட்டின் அழகோ ஆளுமையோ ஆதிக்கமோ இதில் கிடையாது.  இரண்டும் வேறு வேறு தளங்கள் என்ற போதும் நார்வேஜியன் வுட் என்றுமே முரகாமியின் சிறந்த படைப்பாகவே விளங்கும்.  South of the border, west of the sun கதை ஒரு சாதாரணமான mid-life crisis பற்றியது மட்டுமே என்றாலும், மற்ற கதைகளில் இருந்து அதை வேறுபடுத்துவதுவது அதனுடைய உருவகம் தோய்ந்த உபதேசங்களும், முரகாமி மனிதனின் மனநிலையை சோகம் தோய்ந்த வரிகளில் வடிக்கும் அற்புதமும் தான்.

கதையில் வாழ்க்கையை பாலைவனத்தோடு ஒப்பிடும் கட்டம் ஒன்று உண்டு. எது வாழ்ந்தாலும், எது வீழ்ந்தாலும் இறுதியில் மிஞ்சுவது பாலைவனமே எனும் சித்தாந்தமும் உண்டு. அத்தகைய பாலைவனத்தில் பெய்யும் மழையாகவே ஷிமமொடோ காட்டப்படுகிறாள். ஹஜிமேவின் வறண்டு போன வாழ்க்கையில் வளமை சேர்க்கும் மழையாகவே அவள் உருவகப்படுத்தப்படுகிறாள். மழை வரும் இரவுகளில் மட்டுமே அவள் ஹஜிமேவை சந்திக்க வருவாள்.  ஆனால் மழை ஓயும் காலமும் உண்டு என்பது ஆசையில் வேகும் அன்பிற்குத் தெரிவதில்லையே. நிராசை நிறைவேறும் காலம் வரும் போது வாழ்வில் நிலையானவற்றைப் பாதுகாக்கத் துணியும் மனநிலை எத்தனை பேருக்கு உண்டு? கைக்கெட்டாத வானவில் கண்முன்னே தோன்றும் போது கால்கள் நிற்கும் தரையை கண்கள் பார்ப்பதில்லை. நிராசை ஏற்படுத்தும் வலி நிசப்தமானது. ஆனால் ஆழமானது.

“Lots of different ways to live and lots of different ways to die. But in the end that doesn't make a bit of difference. All that remains is a desert.”

“If I could cry, it might make things easier. But what would I cry over? Who would I cry for? I was too self-centered to cry for other people, too old to cry for myself.”